கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம், ‘இங்க நான் தான் கிங்கு’. உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் மே 10 அன்று பிரமாண்டமான முறையில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், இயக்குநர் ஆனந்த் நாராயண் பேசுகையில், இது வரையிலும் படத்திற்கு ஆதரவு தந்து வரும் அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் அன்பு சார் கதை கேட்கிறார் என்றதும் அவரை நெருங்க முயற்சித்தேன். செந்தில் சார் மூலம் தான் அவரை சந்தித்தேன்.
ஒரு படம் செய்வதாக கதை சொன்னார்கள், உடனே ஒப்புக்கொண்டேன். எனக்காக முழு டீமையே கொடுத்தார்கள். படம் டாக்கி போர்ஷன் முடித்தவுடன் என்னைக் கூப்பிட்டு பாராட்டினார். சந்தானம் சாரை ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்திற்காக சந்தித்துள்ளேன், அவருக்கு நான் ரசிகன். இப்போது அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. முதல் நாளே என்னைக் கூப்பிட்டு பாராட்டினார்.
ஷூட்டிங்கில் செட்டிலேயே இருந்து என்னுடன் விவாதிப்பார். அவர் டீமுக்கு முக்கியமாக நன்றி. இமான் சார் மியூசிக் அட்டகாசமாக வந்துள்ளது. சந்தானம் சார் எமோஷன் காட்சி ஒன்று இருக்கிறது, அதில் சந்தானம் சாரா இசையா என போட்டியே இருக்கும்.
சந்தானம் சாருக்கு இணையாக புதுமுகம் லயா சூப்பராக நடித்துள்ளார். தம்பி ராமையா சார் அருமையாக நடித்துள்ளார். எல்லோருடைய பெஸ்ட் இந்தப்படத்தில் தந்துள்ளனர் அனைவருக்கும் என் நன்றிகள்.
தொழில்நுட்ப குழுவினர் அனைவருக்கும் நன்றி. கண்டிப்பாக குடும்பத்தோடு சந்தோஷமாக கொண்டாடும் படமாக இது இருக்கும், அதற்கு ரைட்டருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். மே 10 படம் பார்த்து ஆதரவு தாருங்கள் என்றார்.
அடுத்து பேசிய இயக்குநர் செல்லா அய்யாவு, கோபுரம் பிலிம்ஸ் தயாரித்த ‘வெள்ளக்கார துரை’ படத்தில், நான் அஸிஸ்டெண்ட். தயாரிப்பாளர் அன்பு சார் சினிமாவை எவ்வளவு நேசிப்பார் என்பது தெரியும்.
ஒரு படம் வெற்றி பெற்றால் அதைப்பற்றி நிறைய பேசுவார். திரைத்துறையில் இருப்பவர்களுக்கு பொறுப்பு மிக அதிகம் என்பதை எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார். கொஞ்ச காலத்திற்கு பிறகு இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளார்.
வருடத்திற்கு நாலைந்து படங்கள் செய்ய வேண்டும். இந்தப்படம் நான் பார்த்துவிட்டேன். சந்தானம் சார் ரசிகன் நான். இந்தப்படத்தில் எல்லோரும் சிரித்து கொண்டே இருக்கலாம். அவருடன் இணைந்து விரைவில் படம் செய்வேன். படம் வெற்றிபெற வாழ்த்துகள் என்றார்.
நிறைவாக, தம்பி ராமையா பேசும்போது, ‘இங்க நான் தான் கிங்கு’, குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும். இப்போது படங்கள் நிறைய விவாதிக்கப்படுகிறது. மலையாள படங்கள் பற்றி சொல்கிறார்கள்.
ஆனால், எல்லாவற்றிற்கும் தாய் தமிழ் சினிமா தான். முன்பெல்லாம் தயாரிப்பு தரப்பில் கதை இலாகா இருக்கும். ஒரு கதை தயாராக பல அடுக்குகள் இருக்கும் தேவரய்யா ஆரம்பித்து ஆர் பி சௌத்திரி வரை கதையை தேர்ந்தெடுத்து தயாரிப்பதில் மிகுந்த கவனம் இருக்கும்.
அது போல் கோபுரம் பிலிம்ஸ் தேர்ந்தெடுத்து படம் செய்கிறார்கள். அன்புசெழியன் சார் தனது மகளை இந்த துறைக்கு கூட்டி வந்துள்ளார். தெளிவானவராக இருக்கிறார், வாழ்த்துகள் மகளே. இப்படம் காம வாடை இல்லாத காமெடிப்படம். நல்ல கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். அன்பு தம்பி இமான் பெரிய அளவில் சிறப்பான பாடல்கள் தந்துள்ளார்.
சந்தானத்தின் வெற்றிக்கு காரணம் அவர் மனது தான். அவர் நிஜ ஹீரோ. தன் பழைய நண்பர்களை வைத்து காப்பாற்றுவது மிகப்பெரிய விஷயம். ஒரு காட்சியை கடைசி ரசிகன் வரை ரசிக்க வெண்டும் என்பதில் கடும் முயற்சி செய்வார் சந்தானம். அவருடன் பயணிப்பது மிகுந்த சந்தோஷம்.
லியா அறிமுக நடிகை என்ற தயக்கம் இல்லாமல் எங்களுக்கு ஈடு கொடுத்து நடித்துள்ளார், நல்ல எதிர்காலம் உள்ளது வாழ்த்துகள். இப்படத்தில் முழு நீள காமெடி பாத்திரம் செய்துள்ளேன். அனைவருக்கும் இப்படம் பிடிக்கும். மே 10 அனைவரும் படம் பார்த்து ஆதரவு தாருங்கள் என்றார்.