மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்காக ஆயிரம் விளக்கு பகுதியில் ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோயில் கோபுரங்கள் மற்றும் அங்குள்ள ராஜ கோபுரத்தை இடிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டதாக கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலயம் காப்போம் கூட்டமைப்பின் தலைவரான மயிலாப்பூரை சேர்ந்த பி.ஆர்.ரமணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, முதல் அமர்வு நீதிபதிகளான பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ் ராமன் ஆஜராகினார்.
அவர் பேசுகையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக கோயில்களை இடிக்க மாட்டோம். சில மாற்று ஏற்பாடுகளை முன்மொழிகிறோம் என்று கூறி விவரங்களை தாக்கல் செய்தார். அதில், துர்கை அம்மன் கோயில் நுழைவு கோபுரத்தை 5 மீட்டர் கோயில் உள்புறம் தள்ளி வைத்து, மெட்ரோ பணிகள் முடிந்ததும் மீண்டும் பழைய இடத்தில் மாற்றி வைக்கப்படும்.
இதே நேரம், ரத்தன விநாயகர் கோயில், தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு, பணி முடிந்ததும் இந்து சமய அறநிலையத்துறை கூறும் இடத்தில் மெட்ரோ நிர்வாகம் கோயிலை கட்டித் தரும் என்றார்.
மேலும், மெட்ரோ ரயில் நிலைய நுழைவு, வெளியேறும் பாதை வேறு இடத்தில் அமைக்கப்படும். யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன வளாகத்தில் மாற்றப்படுகிறது எனத் தெரிவித்தார்.
இதையடுத்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வழங்கிய மாற்று ஏற்பாட்டை ஏற்ற நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.