கேரள மாநிலம், வயநாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், கடந்த 29-ஆம் தேதி நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், பூஞ்சேரி மட்டம், முண்டக்கை, அட்டமலை, சூரல்மலை ஆகிய கிராமங்கள் முற்றிலும் சீர்குலைந்துள்ளன. இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்னும் பலரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. நிலச்சரிவு பாதிப்புகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் ஏற்கனவே பார்வையிட்டனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, வயநாட்டுக்கு சனிக்கிழமை செல்கிறார். கன்னூருக்கு காலை 11 மணிக்கு சென்றடையும் பிரதமர், பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாக பார்வையிடுகிறார். அப்போது, மீட்புப்பணிகள் குறித்து பிரதமரிடம் மீட்புப்படையினர் விளக்கம் அளிக்கின்றனர். மறுவாழ்வுப் பணிகளையும் மோடி பார்வையிட உள்ளார்.
மேலும், நிவாரண முகாம்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு சென்று, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நிலச்சரிவிலிருந்து தப்பியவர்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிகிறார். இதனைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் ராஜீவ் குமார் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது. குறிப்பாக, சூரல்மலை மற்றும் முண்டக்கையில் 2 மணிநேரம் ஆய்வு செய்த மத்தியக் குழு, பேரிடரில் இருந்து மீண்டவர்களிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறியது.
இதனை தொடர்ந்து வயநாடு மாவட்ட ஆட்சியர் மேகாஸ்ரீ, கேரளா பொதுப்பணித்துறை, சுற்றுலாத்துறை மற்றும் வனத்துறை அமைச்சர்களுடன் மத்திய குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள இரண்டாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குமாறு கேரளா அரசு சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.