பெளர்ணமி கிரிவலம் :
ஒவ்வொரு மாதமும் வரும் பெளர்ணமி திதி சிவ பக்தர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒரு நாளாகும். பெளர்ணமி என்றாலே அனைவருக்கும் நினைவில் வரும் தலம் திருவண்ணாமலை தான். முக்தி தலமாகவும், பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலையில் மலையை வலம் வந்து வழிபடும் முறையான கிரிவலம் மிக முக்கியமான வழிபாடாகும். சிவ பெருமான், பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் ஜோதி வடிவமாக, அடி முடி காண முடியாத அண்ணாமலையாராக காட்சி அளித்த தலம் திருவண்ணாமலை. இங்கு சிவனே மலையின் வடிவமாக அமர்ந்திருப்பதாக நம்பப்படுவதால் இங்கு மலையை வலம் வந்து வழிபடும் வழக்கம் உள்ளது.
திருவண்ணமாலை கிரிவலம் பலன்கள் :
திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து வழிபடுவதால் ஆன்மிக ரீதியாகவும் சரி, அறிவியல் ரீதியாகவும் சரி, ஆரோக்கியம் தொடர்பாகவும் சரி பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது. 14 கி.மீ., தூரம் கொண்ட திருவண்ணாமலை கிரிவல பாதையில் 99 கோவில்கள் உள்ளது. ஒரு முறை இந்த மலையை வலம் வந்து வழிபட்டால் உலகில் உள்ள அனைத்து கடவுள்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். இங்கு சித்தர்கள் பலர் இன்றும் வாழ்ந்து வருவதால் அவர்களின் ஆசியுடன், பாவங்கள் நீங்கி, முக்திப் பேறு கிடைக்கிறது. அண்ணாமலையில் உள்ள மூலிகை காற்று மேலே படுவதால் பல விதமான நோய்கள் குணமாவதாக சொல்லப்படுகிறது.
திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலம் :
திருவண்ணாமலையில் அனைத்து நாட்களும் கிரிவலம் செல்லலாம் என்றாலும் பெளர்ணமி நாளில் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வழிபடுவது மிக உயர்ந்த பலனை தரும். சந்தினின் முழு ஆற்றலும் பூமியின் மீது படும் நாள் பெளர்ணமி. இந்த நாளில் சந்தினை தலையில் சூடி சந்திரமெளலீஸ்வரராக காட்சி தரும் சிவ பெருமானையும், கயிலாய மலைக்கு இணையான அண்ணாமலையையும் வலம் வந்து வழிபட்டால் சிவனின் அருளும், சந்திரனின் அருளும் கிடைக்கும். ஜாதகத்தில் சந்திரனால் ஏற்பட்டுள்ள கோளாறுகள் நீங்கும். புத்தி தெளிவடையும். மனக்குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும்.
ஆகஸ்ட் 2024 பெளர்ணமி சிறப்பு :
இத்தகைய சிறப்பு மிக்க திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி வருகிறது. அதுவும் சிவ பெருமானுக்கும், சந்திர வழிபாட்டிற்கும் ஏற்ற திங்கட்கிழமையில் இந்த பெளர்ணமி வருவதால் அதிக சிறப்புடையதாக கருதப்படுகிறது. அது மட்டுமல்ல இந்த நாளுக்கு மற்றொரு சிறப்பும் உள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் பெளர்ணமியானது ஆவணி அவிட்டம் நாளுடன் சேர்ந்து வருகிறது. ஆவணி அவிட்டம் என்பது மந்திரங்களில் மிகவும் புனிதமான, முதன்மை மந்திரமான காயத்ரி மந்திர ஜபத்திற்குரிய நாளாகும். இந்த நாளில் காயத்ரி மந்திரத்தை ஜபித்த பிறகு, வேதங்களின் தலைவனாகிய சிவ பெருமானின் வழிபாட்டினையும், கிரிவலத்தையும் மேற்கொள்வதால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பல மடங்கு புண்ணிய பலன்களை தரும்.
கிரிவலம் செல்ல ஏற்ற நேரம் :
ஆகஸ்ட் 19ம் தேதி அதிகாலை 03.07 மணிக்கு துவங்கி, ஆகஸ்ட் 20ம் தேதி செவ்வாய்கிழமை அதிகாலை 03.07 மணிக்கு துவங்கி. ஆகஸ்ட் 19ம் தேதி சர்வ பெளர்ணமி நாள் என்பதால் அன்று நாள் முழுவதுமே கிரிவலம் செல்வதற்கு ஏற்றதாக உள்ளது. இந்த நேரத்தில் பக்தர்கள் ஈசனை வணங்கி விட்டு, தங்களின் கிரிவல பயணத்தை துவங்கலாம். காயத்ரி மந்திரத்தின் அதிர்வுகள் நம்முடைய உடலில் இருக்கும் நேரத்தில் கிரிவலம் செய்வதால் காயத்ரி மந்திரத்தின் பலனும், சிவ மந்திரத்தின் பலனும் சேர்ந்த மிக உயர்ந்த புண்ணிய பலனை நமக்கு தரும்.