முருகப் பெருமானுக்குரிய எத்தனையோ மந்திரம் இருந்தாலும் அவற்றுள் மிகவும் புகழ்பெற்றது கந்தசஷ்டி கவசம் தான். இதை சொல்லாத, கேட்காத முருக பக்தர்களே இருக்க முடியாது. கந்தசஷ்டி கவசம் முழுவதும் தெரியாதவர்கள் கூட, காக்க காக்க கனகவேல் காக்க…நோக்க நோக்க நொடியினில் நோக்க…பார்க்க பார்க்க பாவம் பொடிபட என்ற வரிகளை சொல்லாமல் இருக்க மாட்டார்கள். கந்தசஷ்டி கவசத்தை எப்படி சொல்ல வேண்டும், சொன்னால் என்ன பலன் கிடைக்கும், கந்தசஷ்டி கவசம் சொன்னால் முருகன் எப்படி வந்து நம்மை காப்பார் என்பதை இந்த பாடல் வரிகளே விளக்கும்.
முருகனுக்கு விருப்பமானது திருப்புகழ் என்றாலும், முருகன் வழிபாடு என்றாலே பக்தர்களுக்கு நினைவிற்கு வருவது கந்தசஷ்டி கவசம் தான். கந்தசஷ்டி கவசத்தை தினமும் தொடர்ந்து 48 நாட்கள் பக்தியுடன் சொல்லி வழிபட்டால், முருகன் அருள் நிச்சயம் கிடைக்கும். முருகனே உடன் இருப்பார் என்பது பலரும் அனுபவத்தில் கண்ட உண்மை. அப்படிப்பட்ட கந்தசஷ்டி கவசத்தை ஒரே நாளில் 36 முறை எப்படி சொல்வது? அப்படி சொன்னால் என்ன பலன் கிடைக்கும்? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கந்தசஷ்டி கவசம் :
முருகப் பெருமானின் அருளை பெறுவதற்கும், அவரை போற்றி பாடுகவதற்கும் உரிய புகழ்பெற்ற மந்திரம் கந்தசஷ்டி கவசம். இதனை பால தேவராயன் சுவாமிகள் இயற்றினார். திருச்செந்தூரில் முருகப் பெருமானின் அருளை பெற்ற பால தேவராய சுவாமிகள், கந்தசஷ்டி கவசத்தை இயற்றினார். இதை அவர் அரங்கேற்றியது சென்னிமலை திருத்தலத்தில். தற்போது அதிகமானவர்கள் பாராயணம் செய்யும் சஷ்டியை நோக்க என துவங்கும் கந்தசஷ்டி கவசம் பாடல் திருச்செந்தூர் தலத்திற்கு உரியதாகும். இதே போல் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியே கந்தசஷ்டி கவசம் இயற்றி உள்ளார் பால தேவராயன் சுவாமிகள்.
36 முறை கந்தசஷ்டி கவசம் சொல்ல முடியுமா?
கந்தசஷ்டி கவசம் பாடினால் தீராத வினைகள் தீரும், முருகனின் அருள் கிடைக்கும் என்பது பலரும் வாழ்வில் அனுபவ ரீதியாக கண்ட உண்மை. அவ்வளவு ஏன் கந்தசஷ்டி கவத்தை தொடர்ந்து 16 முறை சொன்னால் முருகனே ஏதாவது ஒரு வடிவத்தில் வருவார் என்பது ஆன்றோர் வாக்கு. இப்படிப்பட்ட மகிமை மிகுந்த கந்தசஷ்டி கவச பாடலில்,
“ஒருநாள் முப்பத்தாறுரு கொண்டு
ஓதியே ஜெபித்து உகந்து நீறணிய
அஷ்டத்திற்குள்ளோர் அடங்கலும் வசமாய்த்”
என பால தேவராயன் சுவாமிகள் குறிப்பிட்டிருப்பார். கந்த சஷ்டி கவசத்தை 36 முறை சொல்லி விட்டு, திருநீறு அணீந்து முருகனை நினைத்து வணங்கினால் மிகப் பெரிய சக்தி கிடைக்கும் என ஆன்மிக பெரியவர்களால் சொல்லப்படுகிறது.
36 முறை சொல்லும் வழி :
ஒரு நாளில் 36 முறை கந்தசஷ்டி கவசத்தை படிக்க முடியுமா என்ற சந்தேகம் பலருக்கும் வரும். ஆனால் கண்டிப்பாக முடியும். கந்தசஷ்டி கவசம் 238 வரிகள் கொண்டது. இதை ஒரு முறை கூறுவதற்கு 7 முதல் 10 நிமிங்கள் வரை ஆகும். இதை 36 முறை ஓத வேண்டும் என்றால் சுமார் 17,000 வரிகள், 70,000 வார்த்தைகள் ஒரு நாளைக்கு சொல்ல வேண்டும். இதை சொல்லி முடிக்க 8 முதல் 10 மணி நேரம் வரை ஆகும். இப்படி 36 முறை ஒரு நாளில் கந்த சஷ்டி கவசத்தை படித்தால் எதிர்காலத்தை நடக்க போவதை கூட முன்கூட்டியே உணர்ந்து அறியும் திறன் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.