முருகனுக்கு மூன்று விதமான விரதங்கள் மிக முக்கியமாக கடைபிடிக்கப்படுகிறது. திதிகளில் சஷ்டி திதி, கிழமைகளில் செவ்வாய் கிழமை, நட்சத்திரங்களில் கிருத்திகை நட்சத்திரம் ஆகியவற்றில் இருக்கப்படும் விரதங்கள் முருகனின் அருளுடன், கேட்ட வரங்களை தரும் சக்தி வாய்ந்த விரதங்களாக கருதப்படுகின்றன. முருக பக்தர்கள் பலரும் இந்த மூன்று விரதங்களையும் கடைபிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பெரும்பாலான பக்தர்கள், குறிப்பாக குழந்தை வரம் வேண்டுபவர்கள் சஷ்டியில் விரதம் இருப்பார்கள். ஐப்பசி மாதம் வரும் மகா கந்தசஷ்டி மட்டுமின்றி, மாதந்தோறும் வரும் சஷ்டி திதிகளிலும் இவர்கள் விரதம் இருப்பது வழக்கம். குழந்தை வரம் வேண்டி விரதம் இருப்பவர்கள் சஷ்டி விரதத்துடன், கார்த்திகை விரதமும் இருப்பது சிறப்பானது என்றே சொல்லப்படுகிறது. சஷ்டி திதிக்கு அப்படி என்ன சிறப்பு, இந்த திதியில் விரதம் இருந்தால் வேறு என்னவெல்லாம் நலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சஷ்டி திதியின் சிறப்புகள் :
முருகனை வழிபட சஷ்டி உகந்த நாளாகும். ஒவ்வொரு மாதமும் இரண்டு சஷ்டி திதிகள் வருவது உண்டு. அமாவாசையை அடுத்து வரும் சஷ்டியை சுக்லபட்ச சஷ்டி (அ) வளர்பிறை சஷ்டி என்றும், பௌர்ணமியை அடுத்து வரும் சஷ்டி கிருஷ்ணபட்ச சஷ்டி (அ) தேய்பிறை சஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது. திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. ஐஸ்வர்யத்தை தரக்கூடியது 6 என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது. ஜோதிடத்தில் 6ஆம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார்.
சஷ்டி திதியில் என்னென்ன செய்யலாம் ?
திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடியவரும் சுக்கிரன்தான். எனவே சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம். 16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப்பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு. வேலைக்கு சேருதல், வீடு மற்றும் வாகனம் வாங்குதல், மருத்துவ தொழில் தொடங்குதல் போன்றவை செய்ய சஷ்டி திதி உகந்த நாளாகும். சஷ்டி விரதத்தை எளிமையாக எப்படி வீட்டிலேயே மேற்கொள்வது? இதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? என்பதை பற்றி பார்க்கலாம்.
சஷ்டி விரதம் இருப்பது எப்படி?
குழந்தை பாக்கியத்தை அருளும் இந்த சஷ்டி விரதத்தை எளிமையாக கோவிலிலும் கடைபிடிக்கலாம். முடிந்த வரை முருகன் கோவிலில் விரதம் இருப்பது விசேஷமானது. அதுவும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் விரதம் இருப்பது கூடுதல் சிறப்பு வாய்ந்தது. வீட்டிலேயே சஷ்டி விரதத்தை கடைபிடிப்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை தொடங்கி, அருகில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று வரலாம். பிறகு பூஜையறையில் முருகன் படத்தின் முன்பு நெய் விளக்கு அல்லது நல்லெண்ணெய் விளக்கு ஏற்றவேண்டும்.
முருகனை வழிபடும் முறை :
முருகனுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மலர் மாலை சாற்றி அலங்காரம் செய்து வழிபடலாம். அவருக்கு இஷ்ட நைவேத்தியமான அவல் உணவுகளை படைக்கலாம். இவ்விரதத்தை முழு நேரமும் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிடலாம். வேலைக்கு செல்பவர்கள் காலையில் பூஜையை முடித்து விட்டு விளக்கை மலை ஏற்றி விட்டு, பின்னர் வேலைக்கு தாராளமாக செல்லலாம். மீண்டும் மாலையில் இதேபோல் பூஜை செய்து விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். வீட்டிலேயே இருப்பவர்கள் விரதம் முடியும் வரை முருகனுக்கு விளக்கு ஏற்றி வைப்பது மிகவும் நல்லது. வீட்டிலேயே முருகனின் பாமாலைகளைப் பாடலாம். குறிப்பாக கந்தசஷ்டி, திருப்புகழ் உள்ளிட்ட முருகனின் சிறப்புகளை உணர்த்தும் பாடலை படிக்கலாம். குழந்தை வரம் வேண்டுபவர்கள் விரதத்தின்போது சொல்ல வேண்டிய திருப்புகழை பாராயணம் செய்யலாம்.
சஷ்டி விரத பலன்கள் :
* குழந்தைப் பேறு- குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சஷ்டி விரதம் இருந்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
* திருமணத்தடை – திருமணம் தடைபட்டு இருப்பவர்கள் சஷ்டி விரதம் இருந்தால், திருமணத்தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
* செல்வ வளம் – சஷ்டி விரதம் இருப்பதால், செல்வ வளம் பெருகும், வறுமை நீங்கும் என்பது நம்பிக்கை.
* நினைத்தது நிறைவேறும் – மனதார வேண்டி விரதம் இருந்தால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
* பிரச்சனைகள் தீரும் – எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், சஷ்டி விரதம் இருந்தால் அவை தீர்ந்து, மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.