ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்க வேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக பணியாற்றிய ஓய்வு பெற்ற ஐ.ஜி பொன் மாணிக்க வேலின் வீட்டில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெறுகிறது. 2023 ஆம் ஆண்டு சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஐந்து பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சிலை கடத்தல் பிரிவில் டி.எஸ்.பியாக இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டவர் காதர் பாஷா. சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றியபோது சிலை கடத்தல்காரர்களுடன் கூட்டு சேர்ந்து பொன். மாணிக்கவேல் சதியில் ஈடுபட்டதாக இடைநீக்கம் செய்யப்பட்ட காதர் பாட்ஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் பணியின் போது தமக்கு பல்வேறு வகைகளில் தொந்தரவு கொடுத்ததாகவும், தன் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்ததாகவும் அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் 2023ஆம் ஆண்டு பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கின் அடிப்படையில் தற்போது சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையின் முடிவிலேயே அவரது வீட்டில் என்னென்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டன, அவரிடம் எந்த மாதிரியான விசாரணை நடத்தப்பட்டது என்கிற விவரங்கள் வெளியாகும்.
பொன் மாணிக்க வேல் 1989இல் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டி.எஸ்.பி.யாக தனது பணியை தொடங்கினார். 1996ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்வாகி சேலம் மாவட்ட எஸ்.பி., உளவுப்பிரிவு டி.ஜ.ஜி., சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர், ரயில்வே ஐ.ஜி., சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. என பல பொறுப்புகளில் இருந்து பின்னர் 2018ஆம் ஆண்டு அவர் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.